தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

10.1.13

தமிழ் இணைய மாநாடுகளும் கட்டுரைகளும்

மாநாடுகளும் கட்டுரைகளும் 
மிழ் இணைய வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இணைய மாநாடுகள் கருதப்படுகின்றன.  இம்மாநாடுகள் தான் தமிழை இணையத்தில் பயன்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு வித்திட்டது.  பன்னாடுகளில் நடைபெற்றுள்ள இவ்விணைய மாநாடு இதுவரை பதினோரு முறை நடத்தப்பட்டுள்ளது.  அண்மையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பதினொன்றாவது தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது நினைவிருக்கலாம்.  
தமிழ் இணைய மாநாடுகள் எந்த நாட்டில் நடத்தப்படுகிறதோ அந்நாட்டின் முக்கியப் பல்கலைக் கழகங்களுடன் `உத்தமம்’  என்கிற அமைப்பும்  இணைந்து மாநாட்டை நடத்துகிறது.  

முதல் மாநாடானது 1997 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்றது.  

இரண்டாம் உலகத் தமிழ் இணைய மாநாடு 1999 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது.

மூன்றாம் உலகத் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் 2000 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

நான்காம் இணைய மாநாடு 2001 இல் மலேசியாவில் நடைபெற்றது.

ஐந்தாம் மாநாடு அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் 2002 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

ஆறாம் உலகத் தமிழ் இணைய மாநாடு 2003ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது.

ஏழாம் மாநாடு 2004 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்றது.

எட்டாம் மாநாடு 2009 ஆம் ஆண்டு செர்மனியில் நடைபெற்றது.

ஒன்பதாம் இணைய மாநாடு 2010 ஆம் ஆண்டு கோவை மாநகரில் செம்மொழி மாநாட்டுடன் இணைத்து நடத்தப்பட்டது.

பத்தாம் இணைய மாநாடு 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியாவில் நடைபெற்றது.

பதினொன்றாம் மாநாடு சிதம்பரம் அண்ணாமலைப் பலகலையில் நடத்தப்பட்டது.

இதுவரை நடைபெற்ற மாநாடுகளில் பல கட்டுரைகள் படிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.  அக்கட்டுரைத் தலைப்புகள்ளுள் சில :

1. தமிழ் வரிவடிவச் சீரமைப்பு

2.தமிழில் சொல் திருத்தம்

3. கலைச்சொல்லாக்க உத்திகள்

4. யாப்பறிஞன்

5.இளங்சிங்கையரின் மின் கலை அனுபவமும் மனித நேய உலாவும்

6. கணினி வழியாக இலக்கண இலக்கிய மொழிப் பணிகள்

7. உலகத் தமிழ் மின்வெளி சமுதாயம்

8.கலைச்சொல்லாக்கமும் சில சிக்கல்களும்

9.ஆய்வு நோக்கில் கணினி உதவியுடன் அகராதி உருவாக்கமும் அகரவரிசைப்படுத்தமும்

10.தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள்

11. கணினி வழி தமிழ்மொழி பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல்

12. தமிழ்த் தரவுத்தளங்கள்

13. திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள்

14. தமிழ் இணைய அகராதி

15. இணையத்தில் கற்றல் - இராபிள்ஸ் கல்வி நிலையம்

16. தமிழ் முதுசொம் காப்பகம் - தோற்றம், வளர்ச்சி, நீட்சி

17. தகவல் தொழில்நுட்பத் தமிழ்க்கலை சொற்களைத் தரப்படுத்துதல்

18. தமிழக மாணவர்களுக்குக் கணினிக் கல்வி

19. தமிழகக் கல்வித் திட்டத்தில் டிஜிட்டல் கிராமப் பள்ளி முறை

20. இணையத்தில் தமிழ் முதல் நூல்


6.1.13

கணித் தமிழ்ச் சங்கத்தை அறிவோம்

கணித் தமிழ்ச் சங்கம் 
கணித்தமிழ்ச் சங்க வலைத்தளம்
1991 பிப்ரவரி சென்னையில் நடைபெற்ற 2வது உலகத்தமிழ் இணைய மாநாடு முடிந்த பின் மார்ச்சு 1 ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் மூலம்கணித்தமிழ்ச் சங்கம் உருவானது.  தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து உருவாக்கப்பட்டதுதான் கணித்தமிழ்ச் சங்கம்.

‘தமிழ் நெட் 99’ மாநாட்டில் எடுக்கப்பட்ட இரண்டு முக்கிய நிகழ்வுகளான ‘தமிழ் விசைப்பலகை’, ‘தமிழ் குறியீடு’ ஆகியவற்றை தரப்படுத்துதல் தொடர்பில் தமிழக அரசின் குழுக்களுடன் இணைந்து பணியாற்றியது கணித்தமிழ்ச் சங்கம்.

இந்தத் தரப்படுத்துதல் படிதான் அன்றைய காலத்தில் கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிக்கப்பட்ட வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி பல முன்னணி நிறுவனங்கள் தமிழ் மென்பொருள்களை தயாரிக்க முன் வந்தன.  அம்மென்பொருள்களை தமிழக அரசின் சார்பில் ‘தரப்படுத்தல் சரிபார்ப்புச் சான்றிதழ்’ வழங்கும் பணியைக் கணித்தமிழ்ச் சங்கமே செய்தது.  அதற்கான அரசு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

ஒவ்வொரு மாதமும் அன்றைய தகவல் தொழில் நுட்ப செய்திகளை, தமிழ் மென்பொருள் தயாரிப்பு சிக்கல்கள் போன்ற பலவற்றை அதன் தொடர்பான அறிஞர்களை அழைத்து கூட்டங்கள் நடத்தியது.  

2000 ஆம் வருடத்தில் சிங்கப்பூரில் மிகச் சிறப்பாக நடைபெற்ற 3வது உலகத்தமிழ் இணைய மாநாட்டில் கணித்தமிழ்ச் சங்கம் சார்பில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

தற்போது இக்கணித்தமிழ்ச் சங்கத்தின் தலைவராக திரு.சொ.ஆனந்தன் அவர்களும், துணைத்தலைவராக திரு.இராம.சுகந்தன் அவர்களும் செயலாளராக ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி அவர்களும் பொருளாளராக ந.ஆனந்தன் அவர்கள் இருந்து வருகின்றனர்.

2012 ஆம் ஆண்டு பிப்ரவரியில் புதியதாக கணித்தமிழ்ச் சங்க மதுரைக் கிளை 25 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டது.  மதுரைக்கிளை சார்பில் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் பல்வேறு கணினித்தமிழ் பயிலரங்கங்கள் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

11வது தமிழ் இணைய மாநாட்டிலும் கண்காட்சியிலும் மக்கள் கூடத்திலும் கணித்தமிழ்ச் சங்கத்தின் பங்களிப்பு முழுமையானது. முதன்மையானது.


3.1.13

திரு.வி.க எனும் சமரசவாதி

திரு.வி.க வின் நூல்கள் எத்திறத்தன? 

திரு.வி.க அவர்கள் சற்றொப்ப ஐம்பத்து மூன்று நூல்களை எழுதியுள்ளார்.  அந்நூல்களில் அனைவரும் விரும்பியது பெண்ணியம் சார்ந்த நூல்களையும் ஆன்மீகம் சார்ந்த கருத்துகளைக் கொண்ட நூல்களையும் எனலாம்.  ஒவ்வொருவரும் திரு.வி.க விடம் ஒவ்வொரு குண இயல்பை விரும்பியதாகச் சொல்கின்றனர். காரணம் அவருடைய நூல்களில் தொய்ந்து எழுந்த வேட்கை மேலீடே.  இத்தன்மைத்தான பல் நூல்களை அவர் படைத்திருக்கிறார்.

அவர் முதன் முதலில் எழுதியதாகச் சொல்லப்படுகின்ற பெரியபுராணப் பதவுரை பல்லோராலும் போற்றுதலுக்கு இலக்காகிய நூலாகும்.  சேக்கீழார் பெரியபுராண நோக்கைத் தன்னுடைய அரும்பதவுரையுள் தெற்றெனக் கொண்டு வந்திருப்பார்.  பலர் இந்நூலைப் படித்துவிட்டுத் திரு.வி.க.வை தீவிரச் சைவப் பற்றாளர் என்றனர்.  உண்மையில் இந்நூலைக் கட்டும்போது திரு.வி.க அப்படித்தான் இருந்திருக்கிறார்.  இந்நூலின் மறுபதிப்பு பல வருடங்களுக்குப் பின் வெளிவரத் தொடங்கியது.  அதுவும் அவரால் விரும்பி வெளிவரவில்லை.  பலர் அவரை வற்புறுத்தி மறுபதிப்புக்கு வித்திடுமாறு வேண்டி நின்றனர்.  அப்படி வேண்டி நின்றவர் கருத்துக்குத் தன் செவி சாய்த்துப் பெரியபுராண மறுபதிப்புக்குத் தன்னைத் தயார் செய்தார்.

திரு.வி.க தன்னுடைய பெரியபுராண அரும்பதவுரையுள் எண்ணற்ற செய்திகளை நாயன்மார்களைப் போற்றும் வகையுள் எழுதியிருப்பார்.  பலரும் தூற்றிச் சொன்ன நாயன்மார் செய்கைகள் சிலவற்றைத் தன்னுடைய எழுத்தின் மூலம் அத்திறத்தை மாற்றி அவர்கள் புகழ் பரவச் செய்தார்.

பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் சேர்ந்த ஒரு பதவுரை நூலாகும்.  பலர் பெரியபுராணம் தான்,  திரு.வி.க வின் முதனூல் என்று இயம்புவது நாம் அறிந்ததே.  ஆயினும் அஃது அவர்தம் முதனூலன்று தன்னுடைய அருமை ஆசிரியர் திரு.கதிரைவேற் பிள்ளை அவர்களைப் பற்றி எழுதிய வாழ்க்கை குறிப்பமைந்த நுலே அவருடைய முதனூலாகும்.

திரு.வி.கவின் ஆசிரியரான கதிரைவேற் பிள்ளை அவர்களைப் பற்றி எழுதியிருந்த அந்நூல் அதிகம் வரவேற்கப்படவில்லை. ஏனெனில் அதில் திரு.வி.க கையாண்ட நடை மிகவும் கடினமான நடையாகும்.  பிற்றை நாளில் திரு.வி.க. வே அந்நடையைக் கண்டு யான் இவ்வாறு எழுதியிருக்கக் கூடாது என்று கூட எண்ணினார் எனச் சொல்கின்றனர்.  ஆகையால் தான் பெரியபுராணத்திற்கு அவர் இயற்றிய அரும்பதவுரை முதல் நூலாகக் கொண்டனர்.

திரு.வி.க பல பனுவல்களை எழுதி இருப்பினும் அவருடைய நூல்களில் ஒன்றான `உள்ளொளி’யைப் படித்தாலே அவர்தம் திறனறிந்து கொள்ளலாம்.  அவரின் ஒட்டுமொத்த நூல்களைப் படித்ததைப் போலாகிவிடும்.

பெரியபுராணத்தின் இரண்டாம் பதிப்பு வெளிவந்த போது அவர் மிகத் தெளிந்த சமரசவாதியாய் இருந்தார்.  எம்மதமும் ஒரே திறத்தன என்னும் எண்ணங்கொண்டிருந்தார்.  சமய வாதம் செய்யத் தயாராய் இருந்திலர்.  இதனால் தான் பெரியபுராணத்தின் மறுபதிப்பு சற்றுத் தொய்வுடன்  (கால தாமதத்துடன்) வெளிவந்தது;  அவர் எழுதவும் தயங்கி இருந்தார்.

அவர்,  சைவம் மட்டும் தேர்ந்தது எனத் தேர்ந்து தெளிந்தாரில்லை வைணவமும் சமணமும் பௌத்தமும் இசுலாத்தையும் ஒருங்கே கண்டுணர்ந்து அதிலே நற்சிந்தனை முகிழ்ந்ததைக் கண்டிருக்கிறார். இதனால் தான் பின்னாளில் அனைத்துச் சமயங்களையும் ஒன்றெனக் கண்டார்.

திரு.வி.க இயற்றிய நூல்களில் சிலவற்றை இங்கு அடுக்கலாம்:
பெரியபுராணம் (குறிப்புரையும் வசனமும்)
 மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
 என்கடன் பணி செய்து கிடப்பதே
 சைவ சமய சாரம்
நாயன்மார் திறம்
 தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
சைவத்தின் சமரசம்
இன்ப வாழ்வு
முருகன் அல்லது அழகு
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை
தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொழிவு
 கடவுள் காட்சியும் தாயுமானாரும்
தமிழ் நூல்களில் பௌத்தம்
சைவத் திறவு
 இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து
 நினைப்பவர் மனம்
 இமயமலை அல்லது தியானம்
உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல்
 முருகன் அருள் வேட்டல்
சமரச சன்மார்க்க போதம்
சமரச தீபம்
 சமரச சன்மார்க்கத் திறவு
 தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு
சித்த மார்க்கம்
நாயன்மார் வரலாறு
முடியா? காதலா? சீர்திருத்தமா?
திருமால் அருள் வேட்டல்
 திருக்குறள் விரிவுரை - பாயிரம்
திருக்குறள் விரிவுரை - இல்லறவியல்
இந்தியாவும் விடுதலையும்
பொதுமை வேட்டல்
உள்ளொளி
திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள்
ஆலமும் அமுதமும்
கிறிஸ்துவின் அருள் வேட்டல்
 புதுமை வேட்டல் சிவனருள் வேட்டல்
 பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி
 அருகன் அருகே அல்லது விடுதலைவழி
 பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியமும்           

1.1.13

தமிழை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் மென்பொருள்

`தமிழ்ச் சொல்லாளர்’ மென்பொருள்


தமிழ்மொழியைக் கணினியில் பயன்படுத்துவதற்குத் தற்போது எழுத்துருக்கள், விசைப்பலகைகள், எழுத்துரு மாற்றிகள் போன்ற தனித்தனி மென்மங்கள் கிடைக்கின்றன.  தமிழில் பல வலைத்தளங்கள், வலைப்பூக்கள் நிலவுகின்றன.  ஆனால், தமிழுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வேர்டு போன்ற ஒரு முழுமையான சொற்செயலி அல்லது சொல்லாளர் என்றழைக்கப்படும் ஒரு மென்மம் உருவாக்கப்படாமல் இருந்தது.  இது போன்ற மென்மத்தில் ஆவணத்தின் மொழிநடையில் எழுத்துப்பிழை உள்ள சொற்களைத் திருத்தித் தரும் வசதிகளும், அகராதிகள், சொல்லடைவு போன்றவையும் இடம்பெறும்.  இந்த வசதிகளைக் குறிப்பிட்ட மொழிசார்ந்த ஆய்வுகளின் அடிப்படையில்தான் உருவாக்க முடியும்.  இக்குறையைத் தற்போது வெளிவந்துள்ள மெந்தமிழ் மென்மம் நிறைவு செய்கிறது.

நம் தமிழ் மொழியை எழுதும் போது அதாவது தட்டச்சு செய்யும் போது தட்டச்சுப் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.  மொழி இலக்கணம் மாற வாய்ப்புள்ளது (விகுதிகள்).  ஒற்றுப் பிழை, ள,ல, ழ, ண,ன, ந, ர, ற ஆகிய எழுத்துக்கள் பயன்படுகின்ற இடமறியாது வழங்கும் பிழை முதலியவற்றை இம்மெந்தமிழ் மென்மம் திருத்தித் தருகிறது.  ஆங்கில எம்.எஸ் வேர்டில் உள்ளது போன்ற வசதியே இஃது.

இன்றைய தமிழ்ச்சொற்களுக்கான அகராதி, தமிழ் இலக்கணம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு இம்மென்மம் உருவாக்கப்பட்டுள்ளது.  தமிழை கணிப்பொறிக்குக் கற்றுக்கொடுக்கும் முயற்சியாகவே இது தோன்றுகிறது.  இத்தொடக்க முயற்சி நல் முயற்சியே.

தமிழில் வழங்கிவருகின்ற பல விசைப்பலகை அமைப்புகளும் 20 வகையான எழுத்துருக்களும் இம்மென்மத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.  இதனால் தட்டச்சு செய்வதும் ஒரு எழுத்துருவிலிருந்து மற்ற எழுத்துருவிற்கு மாற்றுவதும் சாத்தியம்.  ஒருங்குகுறி இல்லாது வேறொரு எழுத்துக்குறியைப் பயன்படுத்தி எழுதியிருந்தாலும் அதனையும் ஏற்ற எழுத்து முறைக்கு மாற்றித் தரும் மேம்பட்ட மென்பொருளாக இம்மெந்தமிழ் மென்பொருள் விளங்குகிறது.

சொற்களிலுள்ள பிழைகளைக் களைய பேருதவி புரிகிறது.  வல்லினம் மிகும் மிகா இடங்கள் தான் அனைவருக்கும் தலைவலியாக அமையக் கூடிய ஒன்று. இஃதும் இம்மென்பொருளால் கையாளப்படுகிறது.  நாம் வல்லினம் இடவேண்டிய இடத்தில் இடவில்லை என்றால் அதுவே வல்லினத்தை இட்டும் இடக்கூடாத இடத்தில் நாம் இட்டிருந்தால் அதனைக் களைந்தும் செயல்படுகிறது.  இம்மாதிரியான மென்பொருள் ஆங்கில மொழியில் கூட இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.  ஆங்கில மொழியில் எஃப் 7 என்ற பொத்தானை அழுத்தினால் `ஸ்பெல் செக்’ என்ற வாய்ப்பு வரும் அதிலும் ஏராளமான வார்த்தைகள் நமக்கு காட்டப்படும் அதிலிருந்து சரியான ஒன்றை நாம் தான் தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.  ஆனால் இம்மென்பொருள் தானாகவே பிழை நீக்கிச் செயல்படுகிறது.

சந்திப் பிழை:

படித்து பார், வந்துப் பார் - இவ்விரு சொற்களில் முதலிலுள்ள சொல்லில்வல்லினம் இடவேண்டும் மற்றதில் வல்லினம் இடத்தேவையில்லை.  இப்பிழை நம்மால் தட்டச்சிடப்பட்டால் இதைக் களைந்து உதவுகிறது மெந்தமிழ் மென்பொருள்.

ஆங்கிலத்திற்கு இணையான தமிழ்ச்சொல் எழுதி:

நாம் ஆங்கில் சொற்களை சில தருணங்களில் அப்படியே தமிழில் அதாவது தங்கிலிஷ் ஆக எழுதி விடுவோம் அதனை அழகு தமிழில் மாற்றித் தருகிறது இம்மென்பொருள்.
உ.ம்
நான் காலேஜ் செல்லும் வழியில் என்னுடைய ஸ்கூல் டீச்சரைப் பார்த்தேன்.

நான் கல்லூரி செல்லும் வழியில் என்னுடைய பள்ளி ஆசிரியரைப் பார்த்தேன்

அகராதிகள்:

தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் ஆகிய அகராதிகள் அடிப்படையில் இம்மென்பொருளில் நிறுவப்பட்டுள்ளது.  தற்காலத் தமிழ்ச்சொற்களாக 41 ஆயிரம் சொற்கள் உள்ளிடப்பட்டுள்ளன.

இணைச்சொல் அகராதி:

ஒரு சொல்லுக்கு இணையாக உள்ள வேறு சொற்களையும் நமக்கு வழங்குகிறது இம்மென்பொருள்.  `வெட்கம்’  என்பதற்கு இணையான கூச்சம், நாணம், தயக்கம் என்பனவற்றைக் காட்டும்.

எதிர்ச்சொல் காட்டி:

சொற்களுக்குண்டான எதிர்ச்சொற்களையும் வழங்குகிறது.  
(உ.ம்)
`வெறுப்பு’  என்ற சொல்லுக்கு எதிரான சொல்லைத் தேடினால் விருப்பு, அவா, அன்பு, பாசம், நாட்டம், பிரேமை, பிரேமம், விருப்பம் போன்ற சொற்களைத் தருகிறது.

மயங்கொலிச்சொல்லகராதி:
ல,ள,ழ-ந,ண,ன-ர,ற மயக்கங்களைக் களையவும் ல-ழ குழப்பம் நீங்கவும் அகராதி இடம்பெற்றுள்ளது.

அகரவரிசைப்படுத்தி

பதிவில் அல்லது கட்டுரையில் தேவையான சொற்களை மட்டும் தேர்ந்து அகரவரிசைப்படுத்த உதவி நிற்கிறது.

சொல்லடைவு

சொற்பட்டியலுடன் சொல் வரும் பக்கங்கள் வழங்குகிறது

எண், எழுத்து மாற்றி

எத்தகைய எண்களையும் தமிழ்ப் புணர்ச்சி விதிப்படி தமிழ்ச் சொற்களாக மாற்றித் தரும்.
(உ.ம்)
76896 - எழுபத்தாறாயிரத்து எண்ணூற்று தொண்ணூற்று ஆறு 

பிடிஎஃப் மாற்றி

தேவையான கோப்புகளை பிடிஎஃப் கோப்பாக மாற்றவும் வசதி செய்து தருகிறது.

துணைநூல் பட்டியல்

ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் துணைநூற்பட்டியல் தயாரிப்புக் கருவி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.  எம் எல் ஏ, ஏபிஐ, சிகாகோ போன்ற பலவகை ஆய்வு நடைகளில் துணை நூற்பட்டியல எளிதாகத் தயாரிக்க உதவும் இக்கருவியானது, தமிழ் மென்மத்தில் முதன்முதலாம இடம்பெற்றுள்ளது.

மேற்குறிப்பிட்ட பல தமிழ்க்கருவிகளோடு, தட்டச்சு செய்யப்பட்ட ஆவணங்களைப் பதிப்பிக்க உதவும் கருவிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.  மேலைநாட்டு மொழிகளுக்கான சொல்லாளர் அல்லது சொற்செயலி மென்மக்களுக்கு இணையாக, கணினித் தொழில்நுட்பத்தைப் பின்பற்றி இம்மென்மம் உருவாக்கப்பட்டுள்ளது.

இம்மென்பொருள் 2011 ஆம் ஆண்டு சிங்கப்பூ, மலேசியா ஆகிய நாடுகளில் செப்டம்பர் திங்கள் வெளியிடப்பட்டது.  அங்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆக்குநர்கள்

இம்மென்பொருளை சென்னைப் பலகலைக்கழக்த்தின் மேனாள் தமிழ் மொழித்துறைத் தலைவரும் இந்நாள் தமிழ்ப் பேராயச் சிறப்பு நிலைப் பேராசிரியருமான முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் தனது வல்லுநர் குழுவுடன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து உருவாக்கியிருக்கிறார்.

விலைக்கு 

தற்போது இம்மென்பொருள் விலைக்கு வந்துள்ளது.  இதன் விலை உரூபாய் இரண்டாயிரமாகச் சொல்லப்பட்டுள்ளது. கழிவும் வழங்கப்படுகிறது.  தற்போது நடைபெற்ற உலக இணைய மாநாட்டில் ஆயிரம் உரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

அதிகமாக வாங்குபவர்களுக்கு ஏற்ற கழிவும் வழங்கப்படுவதாகச் சொல்லப்பட்டுள்ளது.

தொடர்புக்கு
இம்மென்பொருள் வேண்டுவோர் ,

ஒருங்கிணைப்பாளர், கணினித்தமிழ்க் கல்வித்துறை, தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகம், காட்டாங்குளத்தூர் - 603 203. என்ற முகவரியை நாடலாம்.  

அல்லது

இணையத் தளம் www.srmuniv.ac.in/tamil_perayam.php, www.lingsoftsolutions.com
மின்னஞ்சல் mentamizh.tp@srmuniv.ac.in
கைப்பேசி 97909 00230
தொலைபேசி 91-44-2745 1645, 2741 7375


31.12.12

2012 - இல் சிலம்புகளில் வலம் வந்த பதிவுகள்

நம் சிலம்புகள் தமிழ் வலைப்பூ கடந்த 2012 ஆம் ஆண்டில் உதிர்த்த தமிழ்த் தொகுப்புகளை ஒருங்கே உங்களுக்குத் தரும் பதிவே இஃது.  சிலம்புகள் வலைப்பூவிற்குத் தாங்கள் வழங்கிய பேராதரவிற்கு நன்றி!
மு.வா வின் அன்னைக்கு
இணைய தள இடுகைகள் எப்படி அமையலாம்?
முப்பருவத்தேர்வு முறை எப்படி இருக்கிறது? 
திருவள்ளுவர்க்குப் பின்அரசியல் அறம்
வலுப்பெறா ஆமாமியா